
கீவ், அக். 8- ரஷ்யா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்தியா சார்பில் 3 அம்ச அமைதித் திட்டம் தயாரிக்கப்பட்டு, உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா வழங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியும், இந்தியா முன்வைத்துள்ள திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பதாகக் கூறியிருந்தார். இதனிடையே, போரை நிறுத்தும் நோக்கில் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
















