
சென்னை, செப். 11-
முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக இஷான் கிஷன் பங்கேற்ற 16 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் தனது திறமையான தலைமைத்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி தெற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஈஸ்ட் ஜோன் அணி 3-வது முறையாக துலீப் கோப்பையை வென்றுள்ளது.இந்த வெற்றி மூலம் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக தனது தோல்வியற்ற சாதனை பயணத்தை மேலும் நீட்டித்துள்ளார். அவரது கேப்டன்சி பயணம் 2018-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது அது 9-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் கேப்டனாக அவர் பங்கேற்ற முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றிலும் தோல்வி ஏற்படவில்லை. 16 போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷன், ஒருமுறையும் தோல்வியை சந்திக்காத கேப்டனாக திகழ்கிறார்.
முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக போட்டிகளில் தோல்வியை சந்திக்காத வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷன் தற்போது டாப்-10 இடங்களுக்குள் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் மஹிந்த ஹலங்கொட 30 போட்டிகளில் தோல்வியின்றி முதலிடத்தில் உள்ளார்.இஷான் கிஷன் கேப்டனாக வெல்லும் 2-வது முக்கியமான பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2025-26 சீசனில் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர், அந்த அணியை சையத் முஷ்டாக் அலி கோப்பை சாம்பியனாக்கியிருந்தார்.















