Home செய்திகள் தேசிய செய்திகள் 2030 முதல் கார்களில் தானியங்கி பிரேக் கட்டாயம்

2030 முதல் கார்களில் தானியங்கி பிரேக் கட்டாயம்

புதுடெல்லி, அக். 23-
சாலை விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2030 முதல் அனைத்து கார்களிலும் தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கார்களில் உள்ள மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (ஏடிஏஎஸ்) சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2030 அக்டோபர் முதல் அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் (ஏஇபிஎஸ்) பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என கூறப்படுகிறது. 2030-க்கு முன்பே உற்பத்தியில் உள்ள கார் மாடல்களுக்கு, 2032 அக்டோபர் முதல் ஏஇபிஎஸ் கட்டாயமாக்கப்படும். ஏடிஏஎஸ் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அடங்கிய வரைவு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவதில் வர்த்தக வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனத்தின் மறைவுப் பகுதி குறித்த தகவலை வழங்கும் அமைப்பு, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, பாதை விலகல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவையும் கட்டாயமாக்கப்பட உள்ளன.
ஏடிஏஎஸ் என்பது 100-க்கும் மேற்பட்ட மின்னணு தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும். இது ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிந்து ஓட்டுநரை எச்சரிக்கும். சில நேரங்களில் மோதலைத் தடுக்கும் வகையில் பிரேக்குகள் அல்லது ஸ்டீயரிங்கை தானாகக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பை அதிகரிக்கும். தற்போது சில கார்களில் மட்டும் ஏடிஏஎஸ் வசதி உள்ளது. ஏஇபிஎஸ் அமைப்பு, வாகனம் அல்லது தடையுடன் ஏற்படவிருக்கும் மோதலைக் கண்டறிந்து, ஓட்டுநர் உரிய நேரத்தில் செயல்படத் தவறினால் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தி விபத்தைத் தடுக்க உதவும். 2027 ஜனவரி முதல் புதிய லாரி மற்றும் பேருந்து மாடல்களில் ஏஇபிஎஸ் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.