
டெல்லி, அக். 7- தனது 25 ஆண்டுகால பொதுச் சேவையை நிறைவு செய்வதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சேவா சங்கல்ப் அபியான்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். நான் எனது தனிப்பட்ட லட்சியத்திற்காக அல்ல, ஒரு குறிக்கோளுக்காகவே வாழ்ந்து வருபவன். “ வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நாம் அடைவோம்! தன்னிறைவு இந்தியா, உலகளாவிய உற்பத்தி மையம், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துதல், விண்வெளிப் பயணம் என அனைத்து துறைகளிலும் நாம் சாதிப்போம் என்றார் பிரதமர் மோடி. ”அரசின் முக்கிய தலைமை பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இது மக்களின் ஆசிர்வாதம். சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த நாட்டு மக்கள் முன் நான் தலைவணங்குகிறேன்” என்றார். நான் கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற போது, இந்த மைல்கல் எட்டுவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. அரசின் தலைமை பொறுப்பில் நான் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் பயணத்தை மக்கள் ஒரு சாதனையாகப் பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது தனிப்பட்ட முறையில் பெருமை தேடிக்கொள்ளும் விஷயமோ அல்லது அதற்கான தருணமாகவோ நினைக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் எனது 50-ஆவது வயதில், நான் மலைகளுக்கு இடையிலும் காடுகளிலும் வசித்து பழங்குடி சமூகங்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தேன். பின்னர் பாஜக-வில்அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். எனது அரசியல் செயல்பாடுகள் ஒரு கட்சித் தொண்டனின் பணிகளை மட்டுமே பிரதிபலித்தன. தேர்தல்களில் நான் ஈடுபட்டிருந்தாலும், ஒருபோதும் நானே தேர்தலில் போட்டியிட்டதில்லை. தேர்தல் அரசியலில் சிறந்து விளங்க நான் விரும்பியிருந்தால், வெகு காலத்திற்கு முன்பே அந்தக்களத்தில் நுழைந்திருக்க முடியும்; ஆனால் அது எனது இயல்புக்கு ஒத்ததாக இல்லை. வாழ்க்கையில் நான் என்னவாகப் போகிறேன் அல்லது எனது எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றி நான் ஒருபோதும் யோசித்துப் பார்த்ததில்லை. ஏனெனில், சிறுவயது முதலே எனக்குக் கற்பிக்கப்பட்ட வளர்ப்பும் விழுமியங்களும், தனிப்பட்ட லட்சியங்களுக்காக அல்லாமல், ஒரு உயரிய நோக்கத்திற்காகவே வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை எனக்குக் கற்று கொடுத்தன என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இன்று உலகம் முழுவதும் இந்திய விமானி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ஒருநாள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானத்தைப் பற்றியும் உலகம் பேசும் சந்தர்ப்பம் வரும். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுப்பதோடு, அதற்கேற்ற தீவிர உழைப்பையும் மேற்கொள்ளும்போது மட்டுமே உயரிய குறிக்கோள்களை அடைய முடியும். இது ஓய்வெடுப்பதற்கான நேரமல்ல; மாறாக, மிகுந்த உற்சாகத்துடன் முன்னேறிச் சென்று, நம்மை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய தருணம் என்றார். இன்று நான் எந்த நிலையில் இருந்தாலும், எந்த பதவியை வகித்தாலும் அதற்கான பங்களிப்பு மக்களுக்கு உரியது. கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை, கட்சித் தொண்டர்களின் உழைப்பே என் பலம்; சக குடிமக்களுக்கு இரவும், பகலும் அயராது சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்று பிரதமர் பேசினார்.













