
புதுடெல்லி: நவ. 21-
அடுத்த 25 நாட்களில் நாடு முழுவதும் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதன்மூலம் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண சீசன் தொடர்பாக நாடு முழுவதும் 25 மாநிலங்களில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆய்வு நடத்தியது. சுமார் 550-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆய்வை நடத்தின. ஆய்வின் அடிப்படையில் சிஏஐடி வெளியிட்ட அறிக்கை: கடந்த 2025-ம் ஆண்டு திருமண சீசனின்போது நாடு முழுவதும் 46 லட்சம் திருமணங்கள் நடைபெற்றன. இதன்மூலம் ரூ.6.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றது.
நடப்பாண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரை நாடு முழுவதும் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதன்மூலம் அடுத்த 25 நாட்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன. இதன்மூலம் டெல்லியில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறும். திருமணங்களால் அனைத்து வியாபாரங்களும் வளர்ச்சி அடையும். குறிப்பாக நகை, ஜவுளி, மளிகை, மின்னணு பொருட்கள் விற்பனையகங்கள், ஓட்டல்கள், சமையல் கலைஞர்கள், போக்குவரத்து, அழகு கலை நிபுணர்கள், புகைப்பட, வீடியோ கலைஞர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என பல்வேறு துறைகளின் வணிகம் கணிசமாக அதிகரிக்கும். திருமண சீசனின்போது தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் சுமார் ரூ.1.2 லட்சம் கோடிக்கு விற்பனையாகும். சேலைகள், ஆயத்த ஆடைகள் சுமார் ரூ.90,000 கோடிக்கு விற்பனையாகும். பரிசுப் பொருட்கள், மளிகை பொருட்களின் விற்பனை ரூ.37,500 கோடியைத் தாண்டும். மின்னணு பொருட்கள், மரச் சாமான்கள், இனிப்பு வகைகள் ரூ.30,000 கோடிக்கு விற்பனை ஆகும். கேட்டரிங் துறையில் ரூ.75,000 கோடிக்கு வியாபாரம் நடைபெறும்.













