
சென்னை: மே 7-
தவெக அரசில் விஜய் தலைமையில் உருவாகும் புதிய அமைச்சரவையில் காங்கிரஸிற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அந்த ஒரு இடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த மிக வலுவான ஒரு கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையிலான உறவு அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஆறு தசாப்தங்களாக நிலவி வந்த ஒரு பெரிய இடைவெளி தற்போது முடிவுக்கு வரவுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அமைக்கவுள்ள புதிய அரசில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ‘ஆளுங்கட்சி’ அந்தஸ்துடன் அமைச்சரவையில் அமரப் போகிறது.


















