Home செய்திகள் தேசிய செய்திகள் 60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

கோல்கட்டா: ஆக. 27-
மேற்கு வங்கத்தில் மட்டும் நடப்பு ஆகஸ்டில் மட்டும் 60 பச்சிளம்குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மால்டாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும 60 பச்சிளம்குழந்தைகள் உயிரிழந்து இருக்கின்றன. அதுவும் கடந்த வாரத்தில் ஒரே நாளில் 10 பச்சிளம்குழந்தைகள் உயிரிழந்து உள்ளன.
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக இவ்விவகாரம் வெளிவந்தவுடன், சுகாதாரத் துறை விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.
பல்வேறு உடல் நலக் கோளாறுகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பச்சிளம்குழந்தைகள் இறப்பு குறித்து உரிய விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதாரத்துறை மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வர் பிரசென்ஜித் பார் கூறி இருப்பதாவது;
ஆக.12ம் தேதி மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்தன. அவற்றில் 8 குழந்தைகள், மால்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு சுகாதார மருத்துவமனைகளில் இருந்து கவலைக்கிடமாக நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டன.
10 குழந்தைகளில் 2 மட்டுமே மால்டா மருத்துவமனையில் பிறந்தன. மற்றவர்களுக்கு தீவிரமான உடல்நலக் கோளாறுகள் இருந்தன. உயிரிழந்த 60 குழந்தைகளில் 44 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரையின் பேரில் இங்கே கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவை ஆகும். எஞ்சிய 16 குழந்தைகள் இங்கு தான் பிறந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.