
வதோதரா: செப். 12 –
குஜராத் சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத்துறை மந்திரி அர்ஜுன் மோத்வாடியா, மாநிலத்தில் ஜூலை 31-ந்தேதி வரையிலான கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஷைலேஷ் பார்மர் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்தார்.உயிரிழந்த சிங்கங்களில் தலா 17 ஆண் மற்றும் பெண் சிங்கங்களும், 28 குட்டிகளும் அடங்குவதாக அர்ஜுன் மோத்வாடியா கூறினார். சிங்கங்களின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகளும் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டன.சிங்கங்கள் நிம்மோனியா, ரத்த சோகை, செப்டிசீமியா, பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்த நிலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, முடக்குவாதம், குடல்புழு பாதிப்பு, என்செபாலிட்டிஸ், திடீர் அதிர்ச்சி உள்ளிட்ட பிற காரணங்களாலும் அவை மரணித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக மாநில வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.















