
நியூஜெர்சி, ஆக. 17- இந்தியாவின் 80வது சுதந்திர தினம் மற்றும் அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஒரே இடத்தில் அதிகளவிலான கொடிகளை நாட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் (ஆக.,15) கொண்டாடப்பட்டது. அதேபோல, கடந்த ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவை அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த இரு நிகழ்வுகளையும் சிறப்பிக்கும் விதமாக, நியூஜெர்சியில் உள்ள அமெரிக்கவாழ் இந்தியர்கள் மேற்கொண்ட செயல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஷோஹோ நிறுவனத்தின் ஆதரவுடன், அதிகளவிலான இந்தியா மற்றும் அமெரிக்க கொடிகளை நாட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் நியூ ஜெர்சி லெப்டினன்ட் கவர்னர் கால்டுவெல், அமெரிக்க எம்பி அனலிலியா மெஜியா, இந்தியத் தூதர் வினய் ஸ்ரீகாந்த் பிரதான், பார்சிப்பனி மேயர் புல்கித் தேசாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
















