
கோவை: மே 2-
வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்து, ரூ.3,237 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோவை சிறு, குறு தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ள நிலையில் நிறுவனங்களை மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. வணிக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்தில்கடும் தேக்கம் நிலவி வருகிறது.
வணிக சமையல் காஸ் கிடைக்காததால், பல உணவகங்கள் 2 மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டன. சில உணவகங்களில் உணவுத் தயாரிப்பு அளவு குறைப்பு என எரிபொருள் சிக்கன நடவடிக்கையில் இறங்கின.
பல உணவகங்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. மேலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவங்களும் கோவையில் நடந்தன.
இந்த நிலையில் தற்போது அபரிமிதமான விலையேற்றம் தொழில் துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சிறு தேநீர் கடை தொடங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் நேற்று கூறியதாவது: ஈரான் நாட்டின் மீதான போர் காரணமாக ஆரம்பத்தில் வணிக சிலிண்டரின் விலையை சற்று உயர்த்தினர்.
அப்போதே வெளிச்சந்தையில் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்தது. பலரும் பல மடங்கு விலை கொடுத்து வணிக சிலிண்டரை வெளிச்சந்தையில் பெற்று தொழில் செய்து வந்தனர்.உணவகங்களிலும் சிலிண்டர் விலை உயர்வை காரணம் காட்டி பொருட்களின் விலை உயர்த்தப்பட்டன. தற்போது அரசே 19 கிலோ வணிக சிலிண்டர் விலையை 993 ரூபாய் உயர்த்தியிருப்பது கோவை தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ளது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே தொழில் பாதிப்பை சந்திக்க தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அதிரடியான விலையேற்றத்தின் காரணமாக ரூ.7000 வரை வெளிச்சந்தையில் விற்கப்படும் சிலிண்டர்கள் இனி, ரூ. 10,000 வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


















