
புதுடெல்லி, மே 4- நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்.பாலசுப்ரமணியம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதன்மை கொள்கை ஆலோசனை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. இதன் தலைவராக பிரதமர் இருக்கிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நிதி ஆயோக்கில், அசோக்குமார் லஹிரியை துணைத் தலைவராகவும், ராஜீவ் கவுபா, கே.வி.ராஜு, கோபர்தன் தாஸ், அபய் கரந்திகர் மற்றும் எம். ஸ்ரீனிவாஸ் ஆகியோரை முழு நேர உறுப்பினர்களாகவும் பிரதமர் நியமித்திருந்தார். இந்நிலையில், கல்வியாளர்கள் ஜோரம் அனியா மற்றும் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோரை நிதி ஆயோக் அமைப்பின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்க பிரதமர் மோடி சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன்படி, முழுநேர உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடியின சமூகமான நிஷி சமூகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஜோரம் அனியா. இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றில் அனியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். மற்றொரு புதிய உறுப்பினரான ஆர். பாலசுப்பிரமணியம், ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்தின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டு ஆணையத்தின் மனிதவள உறுப்பினராக உள்ளார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பாக, பிரதமரின் 50 ஆண்டுகால பொதுவாழ்வை மையமாகக் கொண்டு ‘Power Within: The Leadership Legacy Of Narendra Modi’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் 2024-ல் வெளியானது.


















