Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழக வரலாற்றில் முதல்முறையாக! புதிய கட்சியான தவெக சாதனை

தமிழக வரலாற்றில் முதல்முறையாக! புதிய கட்சியான தவெக சாதனை

சென்னை: ஏப்ரல் 4-
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 104-ல் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழக வரலாற்றில் புதியதாக போட்டியிட்ட ஒரு கட்சி இத்தனை இடங்களில் முன்னிலை என்பது இரு திராவிடக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என சொல்லலாம்.
தமிழகத்தில் 17-ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம்.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்குகள் அரை மணி நேரத்தில் எண்ணி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளின் வெற்றி நிலவரங்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு கடைசி சுற்றுக்கு முன்னர் அறிவிக்கப்படும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் திமுக கூட்டணி 54 இடங்களிலும், அதிமுக கூட்டணி 78 இடங்களிலும், தவெக 104 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை. திமுக கூட்டணியில் திமுக 40 இடங்களிலும் , காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், தேமுதிக 1 இடத்திலும் , விசிக 1 இடத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அது போல் அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் அதிமுக 67 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. தவெகவை பொருத்தமட்டில் 104 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.