
புதுடெல்லி, மே 8- மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கலாம் என்ற தகவல் சர்வதேச அளவில் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. அவற்றின் எச்சில், சிறுநீர் அல்லது கழிவுகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும்போது பாதிப்பு உண்டாகிறது. ஆனால், இந்த வைரஸால் எலிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. எலிக் கழிவுகள் படிந்த இடங்களைச் சுத்தம் செய்யும்போது, அந்த நுண்துகள்கள் காற்றில் கலந்து, அவற்றை சுவாசிப்பதன் மூலம் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஹன்டா வைரஸ் மனிதர்களிடையே பரவுவது மிக அரிது. இருப்பினும், தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஆண்டீஸ்’ வகை வைரஸ் மட்டும் நெருங்கிய தொடர்புகள் மூலம் மனிதர்களிடையே பரவ வாய்ப்புள்ளது. தற்போது கப்பலில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் இவ்வகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இவ்வைரஸ் வெவ்வேறு விதமாகச் செயல்படுகிறது. சில வகைகள் நுரையீரலைப் பாதிக்கும்; சில வகைகள் சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்களைப் பாதிப்பவையாக உள்ளன. காய்ச்சல், தசை வலி மற்றும் வயிற்று உபாதைகள் ஹன்டா வைரஸ் பாதிப்பின் ஆரம்பகட்ட அறிகுறிகளாகும். இவை ஒரு வாரம் முதல் எட்டு வாரங்களுக்குள் வெளிப்படும். ஆரம்பத்தில் இது சாதாரணக் காய்ச்சல் போன்றே தோன்றும்.அமெரிக்கக் கண்டங்களில் பரவும் ஹன்டா வைரஸ், நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளும் நிலையை உருவாக்கி, உயிருக்கும் உலை வைக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நுரையீரல் பாதிப்பு ஏற்படும்போது இறப்பு விகிதம் 50% வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இதன் பாதிப்பு 1 முதல் 15% ஆக மட்டுமே உள்ளது.


















