Home தலைப்பு செய்தி விஜய்க்கு வெற்றி

விஜய்க்கு வெற்றி

சென்னை: மே 13-
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதிமுக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிஜேபி நடுநிலை வகித்தது. இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5-ன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஜ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.
இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்புக்காக சட்டப்​பேர​வை இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் கூடியது.
அவை கூடியதும், தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்பின்னர், பேரவையில் விவாதம் தொடங்கியது. தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் – கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் தவெக அரசுக்கு ஆதரவை அறிவித்தார். அவர் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார். அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தவெக-வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை சிபிஎம் ஆதரிக்கிறது. இந்த அரசு மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தமிழக சட்டமன்றத்தின் மான்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.
விசிக எம்எல்ஏ வன்னியரசு பேசுகையில், “தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தும் என நான் நம்புகிறேன். முன்கூட்டியே அதற்கு வாழ்த்துகிறேன். பாஜகவின் செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் வகையில் தவெகவுக்கு விசிக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக செயல்பட வேண்டும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம். மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற முந்தைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.