
பெங்களூரு: ஜூன் 3-
கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்கிறார். இதையொட்டி பெங்களூரு லோக பவன் மற்றும் விதான் சவுதா (சட்டமன்றம்) ஆகிய பகுதிகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் 3,500-க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் 1,300 போக்குவரத்து போலீசார் என மொத்தம் 4,800-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தலைமையில், ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனர், 3 இணை கமிஷனர்கள், 9 டி.சி.பி.க்கள், 25 ஏ.சி.பி.க்கள், 60 இன்ஸ்பெக்டர்கள், 160 பி.எஸ்.ஐ.க்கள் மற்றும் கே.எஸ்.ஆர்.பி. (கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ்) படையினர் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுள்ளனர். வி.வி.ஐ.பி. பாதுகாப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லோக பவன் மற்றும் விதான் சவுதா நுழைவாயில்களில் மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விழாவை முன்னிட்டு லோக பவன் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் வருவதால் அவர்களுக்குத் தனி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு (பாಸ್) வைத்திருப்பவர்கள் மட்டுமே லோக பவனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு வருகிறார். அவர் தங்கும் சாங்ரிலா ஹோட்டல் மற்றும் கே.பி.சி.சி. அலுவலகத்தைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் பறக்க தற்காலிகத் தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பதவியேற்பு விழாவின் போது கவனத்தை ஈர்க்க பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்பில் பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரணிகளுக்கு அனுமதி பெற்றிருந்தால், அந்தந்த பகுதி போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் போராட்டக்காரர்கள் கே.ஆர். வட்டம், மகாராணி வட்டம், பசவேஸ்வரா வட்டம் மற்றும் சி.டி.ஓ. வட்டங்களைத் தாண்டி முன்னேறிச் செல்லக் கூடாது என கமிஷனர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


















