
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ஜூன் 6-
இந்தியாவிற்குத் தங்களது அதிநவீன சுகோய்-57 ஐந்தாம் தலைமுறைக்கான போர் விமானங்களை விற்பனை செய்யவும், அவற்றை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி இந்தியாவுடன் இணைந்து கூட்டாக மேம்படுத்தித் தயாரிக்கவும் தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களை புதின் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியப் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர் இந்த முக்கிய திட்டத்தை முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய்-57 ரகத்தை இணைந்து தயாரிக்குமாறு எங்களது நண்பர்களான இந்தியாவிற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.
தற்போதைய நிலையில் இதுவே உலகின் மிகச்சிறந்த போர் விமானம் என்று நான் கருதுகிறேன். எங்களது இந்த முன்மொழிவை பரிசீலிப்பதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.கொள்கை ரீதியாகப் பார்த்தால், இந்த அதிநவீன விமானம் ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டுத் தயாரிப்பாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், கூட்டுத் திட்டத்திலிருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து, நாங்கள் அதனைத் தனித்தே தயாரித்து முடித்தோம்.
தற்போதும் கூட, இதில் தொழில்நுட்பங்களை வழங்குவதிலோ அல்லது மேலும் மேம்படுத்துவதிலோ எங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும், எல்லைகளும் இல்லை. இந்தியாவுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைந்து பணியாற்ற நாங்கள் முற்றிலும் தயாராக உள்ளோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.




















