Home செய்திகள் உலக செய்திகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகிறது;

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகிறது;

நியூயார்க், ஜூலை 24- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து ஒடுக்கி, அடிப்படை சுதந்திரங்களை நசுக்குவதற்காக ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரீஷ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் அர்த்தமுள்ள ஒத்துழைப்பு இருக்க முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவை தொடர்ந்து ஒடுக்கப்படுவதையும், அடிப்படை சுதந்திரங்கள் நசுக்கப்படுவதையும் உலகம் காண்கிறது. உள்நாட்டில் நற்பெயரைப் பெறுவதையும், ஐ.நா. உறுப்பு நாடுகளைத் தவறாக வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பொய் கதைகளை கூறுவதற்கு பதிலாக, பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொண்டு நாட்டில் உள்ள உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது நல்லது. மற்ற நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் ஐக்கிய நாடுகள் சபையால் கடுமையாகக் கண்டிக்கப்படும் வேளையில், பாகிஸ்தானில் நிகழும் இதுபோன்ற அடக்குமுறைகளும் நிகழ்வுகளும் அவற்றுக்கு உரிய கவனத்தைப் பெறுவதில்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இனியும் அப்படியே இருக்கும். இது அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வமான யதார்த்தமாகும், இதை பாகிஸ்தான் வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. இவ்வாறு பர்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானை கடுமையாக சாடி பேசினார்.