
ஹாசன், ஜூன் 8-
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள சன்னபட்டணா மாவட்ட நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரபல ரவுடி ஒருவரை, மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்
கொலை செய்யப்பட்ட நபர் மஜேஷ் (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய தாய் ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், மஜேஷ் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இவர் மீது ரவுடி பட்டியலும் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை ஹாசன் நகருக்கு மஜேஷ் வந்திருந்தபோது, அங்கு மறைந்திருந்த கொலையாளிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மஜேஷின் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்குக் கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட ரவுடி மஜேஷ் மீது ஏற்கனவே பல கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ஹாசன் நகரப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொலைகாரர்களைப் பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். நீதிமன்றம் அருகேயே நடந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















