Home மாவட்டங்கள் பெங்களூர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்

சென்னை: ஜூன் 9-
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” இன்று முறைப்படி தொடங்கப்படுகிறது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை “Zero Tolerance” முறையில் ஒடுக்க களமிறங்குகிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், இதற்கான பிரத்யேக வாகனங்கள் மற்றும் சைபர் பிரிவு செயல்பாடுகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 10ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், பதவியேற்ற அன்றைய தினமே சென்னை தலைமைச் செயலகத்தில் தனது முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்பாகக் கையெழுத்திட்ட திட்டம்தான் இந்த “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டமாகும். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டெல்லி பயணம் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த மே 29ம் தேதி நடக்கவிருந்த இந்த விழாவானது தள்ளிப்போனது. இன்று முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார் இந்நிலையில், பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் முறைப்படி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
இந்த உயரிய விழாவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் பங்கேற்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்கனவே செய்யப்பட்டு, காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் வெற்றிகரமாக நடைபெற்றது. காவல்துறை உயர் அதிகாரிகள் விழா நடைபெறும் இடத்தை முழுமையாக ஆய்வு செய்து இறுதிக்கட்ட பணிகளையும் முடித்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த “சிங்கப்பெண் அதிரடிப்படை” என்பது உள்ளூர் காவல் நிலையங்களின் வழக்கமான கோப்பு நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு சாதாரண ரோந்துப் படை அல்ல. இதற்கென முற்றிலும் ஒரு பிரத்யேகக் அதிநவீனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகவும் திறமையான மற்றும் துணிச்சலான பெண் அதிகாரிகளில் ஒருவரான ஐ.ஜி கே. பவானீஸ்வரி தலைமையில் இந்தப் படை முழு வீச்சில் இயங்கவுள்ளது. தொடக்கக் கட்டமாக, இந்த உயரிய அதிரடிப்படையில் 1 எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 பெண் இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 18 சிறப்புப் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இந்த சிங்கப்பெண் அதிரடிப்படைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நிறத்திலான நவீன வாகனங்கள் மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சரால் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய விடியல் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.