
புதுடெல்லி, ஜூன் 10-
ஒரு நபர் அரசியலில் நுழைந்து மக்கள் பிரதிநிதியாக உயர்ந்து முதலமைச்சர், பிரதமர் என உயர் பதவிகளை எட்டி தொடர்ந்து 25 ஆண்டு காலம் கிட்டதட்ட கால் நூற்றாண்டு காலம் நீடிப்பது என்பது அத்தனை எளிது அல்ல. ஆனால் அதனை சாதித்து காட்டி இருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் நாட்டின் பிரதமராகப் பணியாற்றி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, “இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்த,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்” என்ற புதிய மைல்கல்லை இன்று எட்டி இருக்கிறார். 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை, மோடி தான் போட்டியிட்ட எந்தவொரு நேரடித் தேர்தலிலும் தோல்வியடைந்ததே இல்லை என்ற சாதனையை படைத்துள்ளார்.
25 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு நம்மை வியக்க வைக்கிறது. நரேந்திர மோடிக்கு தற்போது 75 வயது ஆகிறது. இந்த 75 ஆண்டுகளில் 25 ஆண்டு காலம் அவர் முதலமைச்சராகவும் பிரதமராகவும் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய சொத்து மதிப்பை கேட்டால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரமாண பத்திரத்தில் பிரதமர் மோடி தன்னுடைய சொத்து தொடர்பான தகவல்களை வெளியிட்டு இருந்தார். இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு மூன்று கோடி ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அவருக்கு சொந்தமாக நிலம் ,வீடு, கார் உள்ளிட்ட எதுவும் கிடையாது. 3.2 கோடி சொத்து மதிப்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதில் 2.86 கோடி ரூபாயை ஃபிக்சட் டெபாசிட் ஆக டெபாசிட் செய்திருக்கிறார்.
கையில் ரொக்கமாக 52 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருப்பதாகவும் இரண்டு வங்கி கணக்குகளின் 80 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் 9.12 லட்சம் ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்திருக்கிறார்.தனக்கு சொந்தமாக நாலு தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு 2.68 லட்சம் ரூபாய் என்று அவர் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மாதம் தோறும் 1.6 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கிறது.


















