Home மாவட்டங்கள் பெங்களூர் மாம்பழம் சாப்பிட்ட அக்காள்-தங்கை பரிதாப பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை

மாம்பழம் சாப்பிட்ட அக்காள்-தங்கை பரிதாப பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை

பீதர்: ஜூன் 13-
மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அக்காள், தங்கை ஆகிய இருவர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பீதரில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவரது மகள்கள் பவானி வைஜிநாத் மேத்ரே (வயது 17), சந்தியாராணி மேத்ரே (14). இவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் இந்துமதி ஆகியோர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு, மாம்பழம் சாப்பிட்டுள்ளனர்.
மாம்பழம் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் உடலம் முற்றிலும் பலவீனமடைந்து, அனைவரும் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி பவானி மற்றும் அவரது தங்கை சந்தியாராணி ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு சகோதரி விஜயஸ்ரீ (19) என்பவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் இந்துமதி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து ஐதராபாத் நாராயணகுடா போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மாம்பழத்தில் விஷம் கலந்திருந்ததா அல்லது ‘புட் பாய்சன்’ (உணவு நச்சு) காரணமா? என்ற உண்மை தெரியவரும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.