
வான்கூவர், ஜூன் 15-உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் வான்கூவர் மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக துருக்கி அணி உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியிருந்தது. இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே உற்சாகத்துடன் விளையாடினர். துருக்கி அணி வீரர்கள் பந்தை தங்கள் வசம் அதிகம் வைத்திருந்தபோதிலும் அவர்களது கோலடிக்கும் முயற்சியை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான முறையில் தடுத்தனர். 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் நெஸ்டோரி இரங்குன்டா சிறப்பான கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பாதியில் துருக்கி வீரர்கள் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பட்டு அவர்களது முயற்சியைத் தடுத்தனர். ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கானர் மெட்கால்ஃப் அபாரமாக கோலை அடித்தார். மஞ்சள் அட்டை போட்டியின் 85-வது நிமிடத்தின்போது துருக்கி வீரர் யூனுஸ் அக்கனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியின்போது துருக்கி அணி 72 சதவீத நேரம் பந்தை தம்வசம் வைத்திருந்த நிலையிலும் கோலடிக்க இயலவில்லை. ஆனால் 28 சதவீத நேரம் மட்டுமே பந்தை தம்வசம் வைத்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 கோல்களை அடித்து வெற்றி கண்டனர். துருக்கி அணி கடைசியாக 2002-ல் உலகக் கோப்பையில் விளையாடி அரை இறுதி வரை முன்னேறியிருந்தது. அதன் பின்னர் தற்போதுதான் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 6-வது முறை உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
















