
கேரளா, ஜூன் 15- கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, பெண்களுக்காக ‘பிரியதர்ஷினி திட்டம்’ என்ற இலவச பேருந்து பயணத் திட்டத்தை இன்று (ஜூன் 15) தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கேரள அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம். கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கேரள முதல்வர் வி.டி.சதீசன், திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், 7 வகையான சாதாரண பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அந்த பேருந்துகளை அடையாளம் காண ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும். இத்திட்டம் பெண்களின் அதிகாரமளித்தலுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சதீசன், “பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என்பது வெறும் சலுகை அல்ல, இது கேரளப் பெண்களுக்கு அரசு அளிக்கும் மரியாதையின் அடையாளம். சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான செய்தியாகவும் இது அமைகிறது. இது கேரளாவுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் 800 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. கே.எஸ்.ஆர்.டி.சி வருவாயை அதிகரிப்பதில் அதன் ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளனர்.


















