
பாரிஸ்: ஜூன் 15-
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இரு தலைவர்களும் இணைந்து ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா நாடுகளில் பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இந்தியாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாநாட்டில் அரங்குகளை அமைத்துள்ளன. உலகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா – பிரான்ஸ் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இணைந்து தீர்வு காண்கின்றன. சூரிய சக்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
‘இந்தியா – பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறிவித்துள்ளோம். இதன் ஒரு பகுதியாகவே ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்மூலம் இந்தியா, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படும்.இந்தியாவில் ஸ்டார்ட்அப் புரட்சி நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 125 நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.


















