
திருவனந்தபுரம், ஜூன் 19- வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், கச்சா எண்ணெய் குறைந்தாலும் பெட்ரோல்- டீசல் விலை குறையாது என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். வளைகுடா போர் கடந்த பிப்ரவரி மாதம் முதலே தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஏற்பட்டது. முதற்கட்டமாக இப்போது இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இருப்பினும், இடைக்கால அமைதி ஒப்பந்தம் வந்த பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் குறைந்துள்ளது. போர் உச்சத்தில் இருந்த போது பேரல் கிட்டத்தட்ட 120 டாலர் வரை போன நிலையில், இப்போது 77 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உடனடியாக குறைக்கப்படாதாம். இதற்கான காரணங்களாக அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார். விலை குறையாது சர்வதேச சந்தையில் விலை குறைந்தவுடன், அந்த குறைந்த ரேட்டில் கச்சா எண்ணெய் உடனடியாக இந்தியாவிற்கு வந்துவிடாது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரக் கால அவகாசம் தேவைப்படுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் வழியாகத்தான் இந்த கப்பல்கள் வர வேண்டும். அங்கு தற்போது கப்பல் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், நிலைமை சீராகிக் குறைந்த விலை எண்ணெய் இந்தியாவை வந்தடைய நேரம் எடுக்கும் என்று பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.





















