
சியாட்டில், ஜூன் 20- உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியது.அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சியாட்டில் மைதானத்தில் நடந்த குரூப் ‘டி’ ஆட்டத்தில், நடப்பு தொடரை நடத்தும் அமெரிக்கா, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிக், காயம் காரணமாக களமிறங்கவில்லை. எனினும், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே அமெரிக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் விறுவிறுப்பில் அமெரிக்க வீரர் பலோகன் அடித்த பந்தை தடுக்க முயன்ற ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், எதிர்பாராதவிதமாக பந்தை தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள்ளேயே அடித்து ‘செல்ஃப் கோல்’ ஆக்கினார். இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ப்ரீமேன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பால் ஒகான் ஆகியோர் முட்டிக்கொண்டதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தை பொருட்படுத்தாமல் களத்தில் சுழன்றடித்த அமெரிக்காவின் அலெக்ஸ் ப்ரீமேன், 43வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். நடுவர் முதலில் இதற்கு ‘ஆப்சைடு’ கொடுத்தாலும், ‘வார்’ தொழில்நுட்ப சோதனையில் அது சரியான கோல் என உறுதி செய்யப்பட்டது. இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்க கடுமையாக போராடியது. இருப்பினும், அமெரிக்காவின் தற்காப்பு ஆட்டத்தால், அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. இறுதிவரை போராடியும் ஆஸ்திரேலியாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.




















