
சியாட்டில், ஜூன் 20- உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை எனக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, இதுகுறித்து ஃபிஃபாவிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்த ஈரான் அணியின் அடிப்படை முகாம், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு மாற்றப்பட்டது. இதனால், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளுக்காக ஈரான் அணி போட்டிக்கு ஒரு நாள் முன்பே பயணம் செய்து, போட்டி முடிந்த உடனே மீண்டும் மெக்சிகோ திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டிக்காக ஈரான் அணி டிஜுவானாவில் இருந்து லாஸ் ஏஞ்சலஸுக்கு வெறும் 127 மைல் தொலைவு பயணம் செய்தாலும், பாதுகாப்பு மற்றும் குடியேற்றச் சோதனைகள் காரணமாக அந்தப் பயணம் சுமார் ஐந்து மணி நேரம் நீண்டதாக அணித்தலைவர் மெஹ்தி தாரெமி தெரிவித்தார். அந்தப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் அமீர் கலேனோயி, “இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஒடுக்கப்பட்ட அணி எங்கள் அணிதான்” என்று வேதனை தெரிவித்தார்.பெல்ஜியத்துக்கு எதிரான அடுத்த போட்டி மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பே லாஸ் ஏஞ்சலஸுக்கு செல்ல ஈரான் கேட்டுக்கொண்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அணிகளுக்கும் சமமான சூழலை வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்றும், வீரர்களின் உடல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது என்றும் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஹெதாயத் மொம்பேனி, “உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் போட்டி நடைபெறும் நகரில் வெறும் 24 மணி நேரம் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்ட ஒரே அணி நாங்கள்தான். இந்தக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை” என்று கூறினார்.




















