
லக்னோ: ஜூன் 20-
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர், அவரது குடும்பத்தார் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அந்தப் பெண்ணின் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை போலீஸ் நிலைய காப்பக அறையில் வைத்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்ணின் கணவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்திலுள்ள தங்க நகைகளை தங்களிடம் தருமாறு கணவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியதாவது: கடந்த 2013-ல் கடும் மழை பெய்த போது காப்பக அறையில் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் நனைந்துவிட்டன.
அவற்றை உலர வைப்பதற்காக காப்பக அறையின் மேல் திறந்தவெளியில் வைத்திருந்தோம்.
அப்போது அறையின் மேல்பகுதிக்கு எங்கிருந்தோ வந்த குரங்குக் கூட்டம் தங்க நகைளை வீசி எறிந்தும், உடைத்தும் பாழ்படுத்திவிட்டன. மேலும் தங்க நகைகளை குரங்குகளே எடுத்துச் சென்றுவிட்டன. அந்த தங்க நகைகளை எங்களால் மீட்க முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


















