
பெங்களூரு: ஜூன் 25-
பெங்களூருவில் பரபரப்பு! பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோலியின் தங்கை கணவரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. நேற்று அதிகாலை முதல் விடிய விடிய சுமார் 24 மணி நேரம் இந்த கிடுக்கிப்பிடி சோதனை நீடித்தது.
பெலகாவி டிவி சென்டர் பகுதியில் உள்ள மஞ்சுநாத்தின் பிரதான வீடு உட்பட மொத்தம் 6 இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இது தவிர பெங்களூரு, மைசூரு என அவருக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சிக்கிய மிக முக்கியமான சொத்து ஆவணங்களை மூட்டை கட்டிக்கொண்டு அதிகாரிகள் பெங்களூரு கிளம்பியுள்ளனர்.
இந்த ஊழல் வழக்கில் மஞ்சுநாத்தின் நெருங்கிய கூட்டாளியான கோவாவைச் சேர்ந்த ‘லோபோ’ என்பவரை பெலகாவியில் அதிகாரிகள் தீவிரமாகத் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால், அவரைப் பிடிப்பதற்காக அமலாக்கத்துறையின் இரண்டு தனிப்படைகள் அவசரமாக கோவாவுக்கு விரைந்துள்ளன.
அரசு சம்பளம் வாங்கிக்கொண்டே பல கோடி ரூபாய் சுருட்டியதாக மஞ்சுநாத் மீது பகீர் புகார்கள் எழுந்துள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, உயர் பதவியில் இருந்து கொண்டே மற்றவர்கள் பெயரில் 100-க்கும் மேற்பட்ட பார் லைசென்ஸ்கள் வைத்திருந்தது மற்றும் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த அதிரடி சோதனை நடந்துள்ளது.
மஞ்சுநாத் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. கடந்த 2009 முதல் 2013 வரை மைசூருவில் கலால் துறை அதிகாரியாக இருந்தபோது, லஞ்ச வழக்கில் லோகாயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் மைசூரு ஜெயிலில் கம்பி எண்ணியவர். அப்போது அவர் பெயிலில் வெளியே வந்தபோது, அவருடைய ஆதரவாளர்கள் ஜெயில் வாசலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அவரைத் தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றது அக்காலத்தில் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


















