
பெலகாவி: ஜூன் 30-
நிலத்தை விற்பனை செய்வது தொடர்பான தகராறில், சொந்தத் தம்பியைத் தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த அண்ணனைப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் கோகாக் தாலுகாவிற்குட்பட்ட அங்கலகி கிராமத்தில் நடந்துள்ளது.
ஹுக்கேரி தாலுகா கோடக் கிராமத்தைச் சேர்ந்த ராஜு சித்தப்பா ருத்ரப்பகோல் (வயது 45) என்பவரே கொலையானவர் ஆவார். இவரைக் கொலை செய்த இவரது சொந்த அண்ணன் சஞ்சு சித்தப்பா ருத்தப்பகோல் (வயது 49) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி அங்கலகி கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த காலிக் கட்டிடத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் உடனடியாக அங்கலகி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சோதனை செய்தபோது, அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ராஜு ருத்ரப்பகோல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சொத்து தகராறில் அண்ணனே தம்பியைக் கொலை செய்தது அம்பலமானது. உடனே சஞ்சுவை வளைத்துப் பிடித்த போலீஸார் அவரிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, தம்பியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்பி) கே. ராமராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கொலையான ராஜுவும், அண்ணன் சஞ்சுவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கலகி கிராமத்திற்கு வந்து கூலி வேலை செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அங்குள்ள ஒரு மடத்தில் தினமும் உணவு சாப்பிட்டுவிட்டு, இரவில் அரசுக்குச் சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் தங்கி வந்துள்ளனர். இவர்களின் பெயரில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை விற்றுவிடலாம் என்று தம்பி ராஜு கூறியுள்ளார். அதற்கு அண்ணன் சஞ்சு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் இவர்களுக்குள் நிலம் சம்பந்தமாகப் பிரச்சினை வெடித்துள்ளது. அப்போது இருவரும் மது அருந்தியிருந்ததாகத் தெரிகிறது. போதையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் சஞ்சு, தம்பி ராஜுவின் தலையில் கல்லைப்போட்டுத் தாக்கியதுடன், கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகும் எதுவுமே தெரியாதது போல, எப்போதும் போல மடத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அந்த ஊரிலேயே வலம் வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எஸ்பி கூறினார்.
கொலையான ராஜுவின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கொலையாளி சஞ்சுவின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பே இவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இருவருக்குமே குழந்தைகள் உள்ளனர், அவர்கள் தனியாக வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். சொத்தை விற்பது தொடர்பான தகராறும், கடுமையான மதுபோதையும்தான் இந்தத் கொலைக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.


















