Home செய்திகள் தேசிய செய்திகள் ரயில் பெர்த் டிக்கெட்டுகளை லஞ்சம் பெற்று விற்பதா?

ரயில் பெர்த் டிக்கெட்டுகளை லஞ்சம் பெற்று விற்பதா?

கொல்கட்டா: ஜூலை 14 -‘ரயில்களில், ‘பெர்த்’ எனப்படும் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளை, லஞ்சம் பெற்று சில டிக்கெட் பரிசோதகர்கள் காய்கறி விற்பது போல, விற்று விடுகின்றனர்.
‘இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதை அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்’ என, கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரியில் இருந்து சீல்டா ரயில்வே ஸ்டேஷன்
நோக்கி கடந்த, 2009 பிப்ரவரியில் டீஸ்டா டோர்ஸா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. படுக்கை வசதி கிடைக்காத இரு பயணியர், டி.டி.இ., எனப்படும், டிக்கெட் பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்து, ‘பெர்த்’ பெற்றுக் கொண்டனர்.அதே பெட்டியில் பயணம் செய்த இரு திருடர்கள், அந்த பயணியர் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து, அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.ஏற்கனவே, பல்வேறு உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த பயணி ஒருவர்,
மயக்க மருந்தின் வீரியம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு பயணி ஒன்பது நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், மயக்க மருந்து கொடுத்து, இரு பயணியரிடம் கொள்ளையடித்த திருடர்களை கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ரயில்களில் காலியாக உள்ள படுக்கைகளை டிக்கெட் பரிசோதகர்கள், சந்தையில் காய்கறி விற்பது போல லஞ்சம் பெற்று, பிற பயணியருக்கு விற்று விடுகின்றனர்.
சில டிக்கெட் பரிசோதகர்கள் செய்யும் தவறே, இத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.
இது போல நடக்கும் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விடுகின்றன. காலியாக உள்ள படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளை, லஞ்சம் பெற்று விற்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இதை அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.