
சென்னை: ஜூலை 14-
லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னைக்கு வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று லண்டனில் இருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதிகாலை 3 மணிக்கு சென்னையில் தரையிறங்க தயாரானது.அந்த விமானம் படிப்படியாக உயரத்தையும், வேகத்தையும் குறைத்து, சென்னையில் தரையிறங்குவதற்காக சுமார் 500 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென விமானத்தின் முன்பகுதியில் பறவை ஒன்று மோதி, விமானத்தின் இன்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதையடுத்து, விமான பொறியாளர்கள் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
பறவை மோதி விமானம் சேதம் அடைந்துள்ளதால், அந்த விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாது. பராமரிப்பு பணிகள் செய்து முடித்த பின்பு தான் விமானத்தை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்ல 268 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து, டெல்லியில் உள்ள இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தால்,சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.













