
மியாமி, ஜூலை 20- பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் 3-ம் இடத்துக்கான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 23-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மியாமியில் நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்குதலைக் கொடுத்தனர். இங்கிலாந்து அணிக்கு 3-வது நிமிடத்திலேயே முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸ் அடித்து கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். இதனால் பிரான்ஸ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து பிரான்ஸ் அணி மீள்வதற்குள் 2-வது கோலையும் இங்கிலாந்து அடித்தது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் எஸ்ரி கோன்சா அந்த கோலை அடித்தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பிரான்ஸ் அணி வீரர்கள் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்துகளை இங்கிலாந்து கோல்கீப்பர் லாவகமாக தடுத்தார். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் புகாயோ சாகா 37-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 45+1 நிமிடத்தில் மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார் புகாயோ சாகா. இதனால் முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல் பாதியிலேயே 4 கோல்களை இங்கிலாந்து வீரர்கள் அடித்ததால் பிரான்ஸ் அணி நிலைகுலைந்து போனது.
















