Home செய்திகள் தேசிய செய்திகள் சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்

சித்தரவதை, இரவும் பகலும் கட்டாய வேலை: ஓமனில் தவிக்கும் ஹைதராபாத் பெண்

புதுடெல்லி, ஜூலை 20-
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). வளைகுடா நாடான ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் ஹைதராபாத் அரசியல்வாதியான அம்ஜத் உல்லா கானுக்கு கண்ணீருடன் பேசி வீடியோ அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உள்ளூர் வேலை வாய்ப்பு முகவர் ஒருவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய வாக்குறுதியை நம்பி, கடந்த மார்ச் 26 அன்று நான் ஓமனுக்குப் பயணம் செய்தேன்.
அங்கு என்னை நாளொன்றுக்கு 15 மணி நேரம் கட்டாய வேலை செய்ய வைக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக எனக்குச் சம்பளம் தரவில்லை. தன்னை முதலாளிகள் அடித்துத் துன்புறுத்துகின்றனர்.சரியான உணவு வழங்காமல் சித்தரவதை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், கொடுமை களைத் தாங்க முடியாமல், தன் முதலாளியிடம் இருந்து தப்பித்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தை அவர் அடைந்துள்ளார். ஷப்னம் அனுப்பிய வீடியோவை அம்ஜத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஷப்னம் குடும்பத்தினரும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்துப் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், “இப்பிரச்சினை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், உரிய மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” பதிலளித்து உள்ளது. அதேவேளையில், “பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அந்தப் பெண்ணை ஓமனுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அம்ஜத் உல்லா கான் வலியுறுத்தி உள்ளார்.