
புதுடெல்லி, ஜூலை 24- டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ‘நீட்’ வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா பற்றியது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்த சதுரங்க ஆட்டம் இன்னும் ஆழமானது; நேரடியாக, லடாக் நிலப்பரப்பை இலக்காக கொண்டது. கடந்த பிப்ரவரியில், ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்கா தலைமையிலான, ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டணியில் நம் நாடும் இணைந்தது. உலகளாவிய சிலிக்கான், செமி கண்டக்டர் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு துறையில், சீனாவின் முழுமையான ஏக போக ஆதிக்கத்தை உடைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம். இந்த ஏ.ஐ., புரட்சிக்கு வலுசேர்க்க, உலகிற்கு அதிகளவில் லித்தியம் தேவைப்படுகிறது. ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், நம் நாடு மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கை அரசியலமைப்பு ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி வருகிறார். இது, மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை உள்ளூர் அமைப்புகள் முறியடிக்க முழுமையான அதிகாரத்தை வழங்கும். இந்த அதிகாரம் வழங்கப்பட்டால், உள்ளூர் அமைப்புகள் லித்தியம் சுரங்கப் பணிகளை முழுமையாக முடக்க முடியும்.













