
புதுடெல்லி: ஜூலை 24-
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோதிலும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா விவகாரத்தில் எவ்வித விட்டுக்கொடுத்தலுக்கும் இடமில்லை என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ராஜினாமா கோரிக்கையில் உறுதியாக உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சி.ஜே.பி அமைப்பின் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகையில், “எங்களது முதன்மை கோரிக்கையான மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும். கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே தீர்வு. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அறப்போராட்டத்திற்கு அழைப்பு
தலைநகர் தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தும் வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா அழைப்பு விடுத்துள்ளார். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சி.ஜே.பி அமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்:
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
- சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான நடவடிக்கைகள் விலக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
- தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.
- அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
தோல்வியில் முடிந்த அரசு பேச்சுவார்த்தை முயற்சி
போராட்டத்தைத் முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், இதுவரை 4 முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும், மத்திய அமைச்சர்களின் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ பேச்சுவார்த்தை நடத்த சி.ஜே.பி மறுத்துவிட்டது. “பொது இடத்திலோ அல்லது ஜந்தர் மந்தரிலோ மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும்” என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாகக் கூறியதால், அரசுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் பலத்த பாதுகாப்பு & போக்குவரத்து மாற்றம்
போராட்டம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து தில்லியின் மத்தியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவலர்களும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக: - தில்லி மெட்ரோவின் 16 முக்கிய இரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
- கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மாலை நேரத்திலேயே மூட அறிவுறுத்தப்பட்டன.
- சில பகுதிகளில் இணையச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளன.













