Home செய்திகள் தேசிய செய்திகள் மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்

மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்

புதுடெல்லி: ஜூலை 24-
நாட்டின் தலைநகரான டெல்லி மாணவர்களின் போராட்டத்தால் தகித்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.
நடைபெற்ற நீட் முறைகேட்டிற்கு அரசு பொறுப்பேற்கவும். கல்விச் சீர்திருத்தங்களையும் கோரி போராடி வரும் மாணவர்களை மோடி அரசு “நாட்டின் எதிரிகளாக” பாவிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர்களின் துணிச்சலுக்கு மோடி அரசு கோழைத்தனமான் வகையில் பதிலளித்துள்ளதாகவும், போராடும் மாணவர்களை நாட்டினுடைய எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நினைத்து அவர்களை கையானது வருவதாகவும் சாடி உள்ளார்.
சோனியா காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒன்றில், நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். போலீசாரின் இந்த அத்துமீறல் கடந்த காலங்களில் சிஏஏ (CAA) எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மற்றும் பெண் மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதல்களை நினைவூட்டுவதாக குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நாட்டின் கல்வித்துறை சீரழிந்துள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மாணவர் போராட்டங்களை வலுவிழக்க செய்ய, அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்து கொண்டவர்களை ‘தேசவிரோதிகள்’ என்று முத்திரை குத்தும் பாஜக-வின் அதே பழைய உத்தி இந்த விவகாரத்தில் மீண்டும் கையிலெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது போராடும் மாணவர்களை ஒன்றிய அரசு கையாண்ட விதம் மூலம், மோடி அரசின் உண்மை முகத்தை நாட்டின் மாணவர்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.