
புதுடெல்லி, ஜூலை 27-
பா.ஜ.க. தலைமையிலான
என்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை இன்னமும் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசின் மீது இன்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் உடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டறிக்கையில் சி.ஜே.பி. தலைவர்கள் தெரிவித்ததாவது:
“ஜூலை 25-ஆம் தேதி ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 49 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். ஆனால், அரசு ஒப்பந்தத்தைப் பின்பற்றவில்லை. எனவே நாடு தழுவிய போராட்டத்தை நடத்த எச்சரிக்கை விடுக்கிறோம்.
போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்.களைத் திரும்பப் பெறுவதாகவும், புதிதாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும் மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், உடனடியாக எஃப்.ஐ.ஆர்.களைத் திரும்பப் பெற்று அதை மதிப்பதில் அரசு தோற்றுவிட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களைக் கைது செய்வதைத் தொடர்ந்து வருவதோடு, தன்னார்வலர்களைக் கண்காணிப்புக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி வருகிறது” என்று சி.ஜே.பி. குற்றம் சாட்டியுள்ளது.
“ஜூலை 25 பேச்சுவார்த்தையின்படி எங்களுக்கு எழுத்துப்பூர்வ நகல் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தைத் தொடங்க வேண்டியிருக்கும்” என்று சி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு உருவான சி.ஜே.பி. மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது













