Home தலைப்பு செய்தி வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

புதுடெல்லி/பெங்களூரு: ஆக. 1-
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் ரூ.200 குறைப்பதாக அறிவித்துள்ளன. மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் விலையேற்றங்களுக்கு இடையிலும், தொடர்ந்து இரண்டாவது மாதமாக விலை குறைக்கப்பட்டு இருப்பது வணிகத் துறைக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
இருப்பினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
“கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிக சிலிண்டர் விலையால் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து விலை குறைக்கப்பட்டிருப்பது, பராமரிப்புச் செலவைக் குறைக்க உதவும்” என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் மூத்த அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளின் மீதான சார்புநிலையைக் குறைக்க, இந்தியா 2027 முதல் தனது எல்.பி.ஜி. தேவையில் 25 சதவீதத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
5 கிலோ எடையுள்ள ‘ஃபிரீ டிரேட்’ எல்.பி.ஜி. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 13 சதவீதம் குறைத்துள்ளன. இதன்படி, டெல்லியில் இதன் சில்லறை விலை ரூ.808.50 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், 14.2 கிலோ வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ.29 உயர்ந்ததால், டெல்லியில் இதன் சில்லறை விலை ₹913-ல் இருந்து ரூ.942 ஆக அதிகரித்தது குறிப்பிடத் தக்கது.

முக்கிய நகரங்களில் புதிய விலை விவரம்
டெல்லி: ரூ.202 குறைக்கப்பட்டு,
புதிய விலை ரூ.2,728
கொல்கத்தா: ரூ.209 குறைக்கப்பட்டு,
புதிய விலை ரூ.2,872.50
பெங்களூரு: ரூ.2,821*
மும்பை ரூ.2,691