
புதுடில்லி, ஆக, 3- சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: தலைநகர் டில்லியில் மட்டும், சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், 2000ம் ஆண்டு முதல், 25 வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்கின்றன. விசாரணை இவற்றில், 2010- – 11க்கான, ‘எய்ம்ஸ்’ முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை தேர்வு, 2011ம் ஆண்டு டில்லி பல்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, 2004ம் ஆண்டு பொது நுழைவுத் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்டவை அடங்கும். பீஹாரில், 2024ல், ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான மூன்று வழக்குகள், 2003 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடு கள் உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில், 14; மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தில் தலா, 10; ராஜஸ்தானில் எட்டு; ஜார்க்கண்ட், கர்நாடகாவில் தலா ஐந்து வழக்குகளும் விசாரணைக்காக காத்திருக்கின்றன. பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்த, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – 2026ன் படி, அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஏற்கனவே தேங்கி கிடக்கும், 158 வழக்குகளை இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற அனைத்து உயர் நீதிமன்றங்களையும் அணுக, சி.பி.ஐ., முடிவு செய்துஉள்ளது. இந்த வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர, சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும், அனைத்து உதவிகளை வழங்கவும் சி.பி.ஐ., தயாராக உள்ளது. நீண்ட காலமாக வழக்கு கள் தேங்குவதால், சாட்சிகள் வயதானவர்களாகி விடுகின்றனர் அல்லது காணாமல் போய் விடு கின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதும் கடினமாகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.














