Home செய்திகள் தேசிய செய்திகள் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி, ஆக. 3- ‘போதைப் பொருள் தற்காலிக உற்சாகத்தை அளித்தாலும், அது ஒட்டுமொத்த வாழ்க்கையை சீரழித்து விடும்’ என்ற பிரதமர் மோடி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொண்டார். ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற உறுதிமொழி பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இளைஞர்களே நம் நாட்டின் எதிர்காலம் என்பது எதிரி நாடுகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் பயங்கரவாதத் திட்டங்களின் ஒரு பகுதியாக போதைப்பொருள் விநியோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் சிறிது காலத்திற்கு உற்சாகத்தை அளிக்கலாம். ஆனால் அது உங்கள் ஒட்டுமொத்த தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும். போதைக்கு அடிமையானவர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது. அவர்களை மதித்து அரவணைத்து மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருபவர்கள் போராளிகள். சமூகம் அவர்களைக் கவுரவிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நாடு நிர்ணயித்துள்ள நிலையில், இளைஞர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கத் தீங்கான போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது அவசியம். இதுவே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.