Home செய்திகள் தேசிய செய்திகள் அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களை குறிப்பிட்டு வரைபடம் வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களை குறிப்பிட்டு வரைபடம் வெளியீடு

புதுடில்லி, ஆக. 8- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 27 இடங்களை நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா தனது வரைபடங்களில் அருணாச்சலப் பிரதேசத்தை ‘ஜாங்னான்’ என்று குறிப்பிட்டு மாற்றி அமைத்து வந்தது. சீனா தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தின் இடங்களுக்குப் போலிப் பெயர்களை சூட்டி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய சர்வே அமைப்பு (Survey of India), அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 முக்கியமான இடங்கள் மற்றும் புவியியல் அம்சங்களை அவற்றின் அதிகாரப்பூர்வ இந்தியப் பெயர்களுடன் தனது வரைபடத்தில் முறைப்படி பதிவேற்றி வெளியிட்டுள்ளது. மறுபெயரிட சீனா முயற்சித்த போது வெறும் தூதரக ரீதியான கண்டனங்களை மட்டும் தெரிவிக்காமல், இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா இந்த வரைபட நடவடிக்கையை எடுத்துள்ளது. லோங்பு (Longju) கிராமம் மற்றும் பிற போர் நினைவிடங்கள், கணவாய்கள், ஏரிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இப்பகுதிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் இது வெளியிடப்பட்டுள்ளது அருணாச்சல பிரதேசத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆறு இடங்களின் பட்டியலை சீனா முதன்முதலில் 2017ல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலும், 2023ல் 11 பெயர்களைக் கொண்ட மற்றொரு பட்டியலும் வெளியிடப்பட்டன. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர் மாற்றும் செயலை இந்தியா தொடர்ந்து திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை வீண் மற்றும் அபத்தமானவை என்று கூறி இந்தியா கடும் கண்டனத்தை பதிவிட்டது.அந்த மாநிலம், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும்’ என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை இவை மாற்றாது என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது இந்த வரைபட நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது. ‘’இந்த இடங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதை உறுதி செய்வதையும், மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அருணாச்சல பிரதேச அரசுடன் கலந்தாலோசித்து இந்த வரைபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.