
சென்னை: ஆக. 10-
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. முதலமைச்சர் விஜய். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று தனித்தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக வரவேற்றன.. இதையடுத்து, சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் முழு ஆதரவுடன் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கடந்த ஜூலை 28ம் தேதி திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த விழாவில், வழக்கமான நடைமுறைக்கு மாறாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலானது முதலாவதாக பாடப்படாமல், 3வதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழ் மண்ணில், அரசு சார்ந்த உயர் கல்வி நிறுவன விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படாத இந்தச் சம்பவத்திற்கு திமுக, நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், இத்தகைய நிகழ்வுகள் இனி எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய முதலமைச்சர் இந்தத் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்று முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர் மனோன்மணியம் பெ. சுந்தரனாரால் 1891-ல் எழுதப்பட்ட “மனோன்மணியம்” என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 1970ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, அரசு விழாக்களில் நிகழ்வின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. தனித்தீர்மானம் முன்மொழிகிறார் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும், தமிழர்களின் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் உயரிய மரியாதையின் வெளிப்பாடாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தவே இன்றைய தினம் சட்டப்பேரவையில் இந்தத் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரத்திற்கு எதிராகத் தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்திருந்தார்.. அந்த வரிசையில், இன்று காலை 9.30 மணிக்குசட்டமன்றம் கூடியதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றம் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று கூடியது.. அவை கூடியதுமே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.. முதலமைச்சர் தீர்மானத்தை கொண்டு வந்து பேசும்போது, :”தமிழ் மொழி கெத்து.. தமிழ மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும்.. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை.. கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை, அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம், , தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது, அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. இதையடுத்து பேரவையிலுள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தனித்தீர்மானத்தை ஆதரித்தும் வரவேற்றும் பேசினார்கள்.. இறுதியில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.













