
பெங்களூரு: ஆக. 10-சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிராய்லர் கோழிகள் விபத்தில் உயிரிழந்தால், அவற்றை ‘உயிர்ச் சொத்து’ மற்றும் ‘சரக்கு’ எனப் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விபத்தின் போது உயிரிழந்த கோழிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி உரிமையாளர் கே.வீரநாராயண சுவாமியும், கோழிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.பி.கீதா அடங்கிய தார்வாட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், உயிரிழந்த கோழிகளுக்கும் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடக மோட்டார் வாகன விதிகளில் கோழி பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், மோட்டார் வாகனச் சட்டம்-1988 பிரிவு 2(13)-ன் படி ‘சரக்கு’ என்ற வார்த்தை உயிர்ச் சொத்தையும் உள்ளடக்கியதாகும். கோழிகளும் உயிர் வாழும் பிராணி/பறவைகள் என்பதால், அவற்றை உயிர்ச் சொத்து மற்றும் சரக்கு எனப் பரிசீலிக்க வேண்டும் என்று அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.மேலும், பல்லாரி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் வழங்கிய ரூ.4.51 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதேசமயம், தீர்ப்பாயம் விதித்த 7 சதவீத வட்டி விகிதத்தை 6 சதவீதமாகக் குறைத்து உத்தரவிட்டது. கூடுதல் இழப்பீடு கோரி கே.வீர நாராயணசுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பல்லாரி ஆந்திரஹாள் கிராமத்தைச் சேர்ந்த ‘பாலாஜி போல்ட்ரி பார்ம்’ உரிமையாளர் கே.வீர நாராயணசுவாமி, கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 18 அன்று செல்லக்கரே கோழிப் பண்ணையிலிருந்து 2,250 பிராய்லர் கோழிகளை வாங்கி ஐச்சர் வாகனத்தில் ஏற்றிச் சென்றார். ஜூன் 19 அதிகாலை 4 மணியளவில் அய்யகரலபள்ளி – செட்டூர் சாலையில் வாகனம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் சுமார் 2,000 கோழிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன; 250 கோழிகளை உள்ளூர்வாசிகள் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு ரூ.5,90,000 வழங்கிடக் கோரி வீர நாராயணசுவாமி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம் கோழிகளுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனமும், கூடுதல் இழப்பீடு கேட்டு வீரநாராயணனும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.













