
பெங்களூரு: ஆக. 10-
நெலமங்களா தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கா மலைக்கு ட்ரெக்கிங் சென்ற பெங்களூரு காடுகோடியைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் அத்வைத் உபாத்யாயா (மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்) மாயமாகியுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அத்வைதைத் தேடும் பணி 3-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது திட்டமிடப்பட்ட தற்கொலையாக இருக்கலாம் என வழக்கை விசாரிக்கும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் காடுகோடியில் உள்ள அத்வைதின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவருடைய லேப்டாப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு அதிர்ச்சி தகவலைத் தேடியுள்ளது தெரியவந்தது. “சிவகங்கா மலையின் ‘சாந்தலா டிராப்’ பகுதியில் இருந்து கீழே விழுந்தால் எவ்வளவு நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும்?” என்று அவர் தேடியுள்ளார்.
அதற்கு ஏ.ஐ., “காலை 7:30 மணிக்கு விழுந்தால் உயிரிழப்பு நிகழக்கூடும்” எனப் பதிலளித்துள்ளது. இதையடுத்தே, ஆகஸ்ட் 4-ம் தேதி அத்வைத் சிவகங்கா மலைக்குச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி மலை ஏறிய அத்வைத், உச்சிக்குச் சென்றதும் தனது நிச்சயதார்த்தப் பெண் பிராப்தி சௌஹானுக்கு கடைசியாக ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதன்பின் அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது. மலையின் உச்சியில் மற்ற பயணிகள் எடுத்த புகைப்படத்திலும் அத்வைத் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெலமங்களா நகர் சி.பி.ஐ. பாரத் கவுடா தலைமையில், போலீசார், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்கள் இணைந்து 3-வது நாளாகப் பிரம்மாண்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் அபாயகரமான பள்ளத்தாக்குகள் மற்றும் செங்குத்தான பாறைப் பகுதிகளில் அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடப்பட்டு வருகிறது. மலையின் உச்சியில் உள்ள ‘சாந்தலா டிராப்’ பகுதி ஆழமான கணவாயாக இருப்பதால் தேடுதல் பணியில் பெரும் சவால் நிலவுகிறது.சிவகங்கா மலை கடல் மட்டத்திலிருந்து 4,800 அடி உயரத்தில் உள்ளது. ஹோய்சாலா மன்னர் விஷ்ணுவத்தனனின் மனைவியும் நாட்டிய ராணியுமான ‘சாந்தலை’ என்பவரிடமிருந்து இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது. மரங்கள், செடிகள் மற்றும் கூர்மையான பாறைகள் நிறைந்த இந்தப் பகுதி சிவகங்கா மலையின் மிக ஆபத்தான பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.













