
தேனி: ஆக. 12-
தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்டவற்றை விளைவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வன உரிமைக் குழுக்கள் சார்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோட்ர் கலந்து கொண்டனர். இதில் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவந்து கொண்டனர். 100 வருடங்களாக வன நிலங்களில் விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.













