
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க அமைப்புகள் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, சட்டசபை சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டார். இப்பேரணியில், ‛கருக்கலைப்பு என்பது கொலை’, ‛கருவைக் கலைக்க உரிமை இல்லை’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்தார். ‛கரு உருவான கணத்திலிருந்தே உயிர் தொடங்குகிறது’ என்றும், ‛ஒவ்வொரு குழந்தையும் கடவுள் அளித்த பரிசு’ என்றும், மத ரீதியிலான நம்பிக்கையை பகிரங்கமாக ஆதரித்துப் பேசினார்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், பெண்களின் உடற்சார்ந்த உரிமைக்கும், சட்டப்பூர்வ உரிமைகளுக்கும் எதிராக பேசுவது தவறான முன்னுதாரணமாகி உள்ளது. ஏற்கனவே, சட்டசபையில், பைபிள் வாசகங்களை மேற்கோள் காட்டி பிரபாகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த விவகாரம் புதிய புயலை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமையை அளிக்கிறது. மேலும், உச்சநீதிமன்றமும் கருக்கலைப்பை அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் சட்டத்திற்கும், பெண்களின் உரிமைக்கும் எதிராக நடந்த, மத ரீதியிலான பிரசாரத்தில், சபாநாயகர் பங்கேற்றது சரிதானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.













