
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- “பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுப்பதும், தேர்வு முறையை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களின் நோக்கங்களாகும். அரசின் முன்முயற்சிகளாலும், வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் மூலமும், இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்று 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். அந்த உரையின் முழு வடிவம்: “நம் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நம் நாடு அதன் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. நாட்டு மக்களும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும், இந்த தேசிய விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
நமது மூவண்ண தேசியக் கொடி, நம் நாட்டின் விடுதலையின் சின்னமாக விளங்குகிறது. அளப்பரிய பெருமிதத்துடன் நாம் அதை ஏற்றுகிறோம். 1947 ஆகஸ்ட் 15 அன்று, அடிமைத்தளத்தில் இருந்து இந்தியத் தாய்க்கு விடுதலை அளிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களும் தங்கள் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதையும், உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை முன்னேற்றும் இலக்கை நோக்கி பணியாற்றுவதையும் உறுதி செய்வதிலேயே, சுதந்திரத்தின் உண்மையான பொருள் பொதிந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், சுகாதாரச் சேவைகளை வழங்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் என அனைவரும் தங்கள் முயற்சிகள் மூலம் நாட்டைக் கட்டமைப்பதற்குப் பங்களித்து வருகின்றனர்.













