Home மாவட்டங்கள் பெங்களூர் ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை

ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை

சென்னை: ஆக. 15-
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், “ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது” என பேசினார். “தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், படைக்கப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக்கொடி ஏற்றி வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்திட உறுதியேற்போம். உங்க அண்ணை, உங்க தம்பியை, உங்க பிள்ளையை ஜெயிக்க வச்சி முதல்வர் ஆக்கிட்டீங்க.. அதனால் உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் என் கூடவே இருக்கனும். உறுதியாக நம்ம அரசோட கூட இருக்கனும். அப்போதுதான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
பொதுவாழ்வில் சமரசம் இருக்க கூடாது. மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் மத்திய அரசுக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போம். மக்களுக்கு பயனுள்ள முந்தைய ஆட்சியின் திட்டங்கள் தொடரும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15ல் தொடங்கப்படும். காலை உணவு திட்டம் செப்.17ல் விரிவாக்கம் செய்யப்படும்” என்று விஜய் பேசினார்.