
சென்னை: ஆக. 21-
எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணியால், 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.25 முதல் செப்.7-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளன.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள், சுமார் ரூ.842 கோடி மதிப்பில், பல கட்டங்களாக நடைபெறுகின்றன. இதன் 2-ம் கட்டமாக, புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த ஜூலை முதல் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றன.
முதல் பிரிவில் 1 முதல் 5-வது நடைமேடை வரையிலும், 2-ம் பிரிவில் 6-வது முதல் 11-வது நடைமேடை வரையிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை பகுதிகளில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக நிலையத்தின் நடுப்பகுதியில் 500 மெட்ரிக் டன் திறன் கொண்ட கிரேன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.













